என்னோடு

என்னோடு உங்களை இணைக்கும் எண்ணங்களோடு...

Thursday, May 18, 2006

இவர்களுடைய பிரச்னை என்ன?

இவர்களுடைய பிரச்னை என்ன?

மதத் துவேஷக்கருத்துக்களை எழுதுவோரில் ஒரு சிலர் வெளிப்படையாகத் தான் இன்ன இயக்கத்தைச் சேர்ந்தவன் என்று கூறிக்கொள்வதுண்டு. (அவ்வியக்கப் பொறுப்பில் இருப்பதால் மறைக்க வழியில்லை என்பதால் கூட இருக்கலாம்). வேறு சிலர், அதை மறைத்தே எழுதுகின்றனர்-அவர்களுக்கு முற்போக்கு என்ற முகமூடி தேவையாக இருக்கிறது. ஆம். முற்போக்கு என்ற பெயரில் சொல்லப்படும் சரக்கு நன்கு விற்பனையாவதை அனைவரும் அறிந்தே உள்ளோம். இவர்களின் எழுத்தை வரிகளுக்கிடையில் படிக்கும் யாரும் இவர்களின் வண்ணத்தை புரிந்தே உள்ளனர் என்பதிருக்க, இந்த வெறுப்பின் பரப்பாளர்கள் 'அய்யோ என்னைப் பார்த்து இப்படிச் சொல்கிறீர்களே' என்று (பொய்யாக) கூக்குரலிடவும் செய்கின்றனர்.(அத்தனை எளிதாக முகமூடியை கழற்றுவதில் உடன்பாடில்லை போலும்).

ஒருசில இஸ்லாமியப் பதிவர் குர்ஆனிலிருந்து அறிவியல் உண்மைகளை நிரூபிக்க பதிவு எழுதிவருகின்றனர்: வேறு மதங்கள் மீது துவேஷம் கக்காத வரையில் அவர்களை எதிர்க்க ஒன்றுமில்லை. அவர்களின் குர்ஆனிய கருத்துக்களை (கருத்துக்களை மட்டும்) ஒரு சுமூகமான விவாத தளத்தில் எதிர்க்கவோ, ஆதரிக்கவோ செய்யலாம். சிலர் அவ்வாறே செய்து வருகின்றதும் பாராட்டத்தக்கதே. அழகிய கருத்துப்பரிமாற்றங்கள் நிச்சயம் ஆதரிக்கப்படவேண்டியவையே.

முன்பொரு முறை தமிழோவியத்தில் திரு.நல்லடியார் என்பவர் ஒரு தொடர் எழுதிவந்த போது, அதற்கு வந்த காழ்ப்புணர்வு பின்னூட்டங்களில் ஒன்று இஸ்லாமின் பரவலை எய்ட்ஸுடன் ஒப்பிட்டு வரம்பு மீறியதும் பதிலடியாக சில முஸ்லிம்களும் பின்னூட்டங்களில் வரம்பு மீறினர். இஸ்லாம் எயிட்ஸுடன் ஒப்பிட்டப்பட்டதை ஒரு குறிப்பிட்ட பதிவர் (இஸ்லாமை தாக்கி எழுதுவதால் 'அடையாள'மான நேசர்) வேறு இடங்களில் உளம்பூரித்து சொல்லி வந்தார். ஆனால் அவரை 'பீடி பற்ற வைக்காதீர்கள் அண்ணாச்சி' என்று சொன்னால் கூட அவரால் தாங்க முடிவதில்லை என்பதை சமீப வேறு சில பதிவுகளிலிருந்து நாம் அறிய முடிகிறது. அப்படி யாரும் சொல்லிவிட்டாலோ, தீவிரவாதிகளுக்குரிய 'தகுதி'யை தாராளமாக அந்த முஸ்லிமுக்கு அவர் அளித்து விடுவார். இன்னொரு பதிவில் சுருட்டு கேட்பதாக ஏளனம் வேறு, இதிலும் தெரிகிறது இவர்களின் கயமைத் தனம்.

இந்த இடத்தில் இந்தப் புனை பெயருக்குப் பின்னால் இருக்கும் கேவலமான அயோக்கியத்தனத்தையும் அலசிப் பார்ப்போம். நேசகுமார் எனும் பெயர் சாதாரணமாக இலங்கையிலும் தென் தமிழகத்திலும் கிறிஸ்தவர்கள் பயன் படுத்தும் பெயர். முதலில் தன்னை இந்தப் புனை பெயர் மூலம் ஒரு கிறிஸ்தவராகக் காட்ட முயன்றார் இந்த காவிக் கும்பலின் ஊதுகுழல். எழுத்தில் நச்சு இருந்தாலும், அதனை ஏதோ நாகரீகமாக எழுதுவது போல் பம்மாத்தும் போக்கும் காட்டிக் கொண்டிருந்தார். இருப்பினும், இச்செயல் மூலம் இஸ்லாமியர்களிடம் இருந்து கிறிஸ்தவர்கள் மீதான வெறுப்பு அவர் நினைத்தபடி வெளிப்படாமல் போகவே, இன்னொரு உத்தியைக் கையாண்டார், அது தான் ஆரோக்கியம் எனும் புனை பெயர். இந்தப் பெயரைப் பார்க்கும் எவருக்கும் இப்பெயரில் எழுதுபவர் ஒரு கிறிஸ்தவர் என நினைப்பது மிக எளிது. இதன் மூலம் தன் ஆழ்மன வக்கிரங்களை எழுத்துகளில் வெளிக்காட்டி, வெளிப்படையாகவே தரக்குறைவான ஆத்திரமூட்டக் கூடிய நாராசமான எழுத்துகள் மூலம் இஸ்லாமியர்களைத் தொடர்ந்து வெறுப்பேற்றி அவர்களின் எதிர்வினைக் கோபத்தை கிறிஸ்தவத்தைச் சாடச் செய்வது மூலம் சிறுபான்மையினமான இரு இனமும் சண்டை இட்டு அதில் குளிர்காய எண்ணினார். ஆனால் அதுவும் நடக்கவில்லை. காவிக்கும்பல் முன்வைக்கும் வருணாசிரமக் கொள்கையினால் பாதிக்கப்படும் சமூகத்தின் அடித்தட்டு மக்கள் தாம் இஸ்லாத்தையோ, கிறிஸ்தவத்தையோ தேர்ந்தெடுக்கின்றனர். மேற்கண்ட புனை பெயர் மூலம், இவ்விரு இனங்களும் சண்டை மூட்டிவிட்டால் பலனடைவது யாராக இருக்கும்?

ஒரு முஸ்லிம் பதிவர், இஸ்லாமிய கணவன் மனைவியருக்கிடையே உள்ள 'படுக்கை' பற்றிய சில உரிமைப் பிரச்னைகளை தன் வலைப்பூவில் எழுதியிருந்தார். இதை மோப்பம் பிடித்த அந்த 'நேசர்', - 'பாருங்கள் இஸ்லாத்தில் பெண்ணுரிமையை' என்று பிலாக்கணம் தொடங்கி இஸ்லாத்தில் பெண்ணுரிமையே இல்லை, அது ஆணாதிக்க மதம், வன்முறை என்றெல்லாம் வழக்கமான 'பாட்டு' பாடியிருக்கிறார்.

சல்மான் என்ற ஒருவர் பின்னூட்டத்தில் சொல்லியிருப்பது போல இரவும் பகலுமாக தேடித்தேடி, இஸ்லாத்தில் எங்கெல்லாம் பெண்ணுரிமை இல்லாமலிருக்கிறது, எங்கெல்லாம் வன்முறை உள்ளது என்பதை தன் மனோஇச்சையின் படி தீர்மானிக்கிறவருக்கு பதிலளிக்கத் தோன்றவில்லை என்றாலும் அங்கே வந்தாலும் சரியாகப் புரிந்துக்கொள்கிற 'நாமக்கல் சிபி' போன்றோருக்காக சில வார்த்தைகள்:

சிபி, அந்தப் பதிவரிடமே நீங்கள் கேட்டுப்பாருங்கள்: ஒரு இஸ்லாமிய ஆண் தன் மனைவியை 'தலாக்' சொல்ல நினைத்தால் அவன்/அவர் மூன்று மாதவிடாய் காலம், மூன்று வாய்ப்புகளுக்கு பொறுத்திருக்க வேண்டும். தவிர, சரியான காரணமும் சொல்லியாக வேண்டும். ஆனால், ஒரு இஸ்லாமியப் பெண் தன் கணவரை 'தலாக்' சொல்ல விரும்பினால், ஒற்றைத் தவணையிலேயே அதை செய்து விட முடியும் .மேலும் எந்த காரணமும் சொல்லத் தேவையில்லையல்லவா! - இஸ்லாத்திலும் (பெண்)மறுமணத்திற்கு அனுமதி உண்டு.இதெல்லாம் பெண்ணுரிமையில்லையா? 'அந்த'க் காமாலைக் (இதுவும் இன்னொரு பதிவில் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம் தான்) கண்களுக்கு ஏன் தென்படவில்லை?. இவ்விதம் நாம் கேட்டால், உடனே நடைமுறையில் 'மார்க்க அறிவு இல்லாத' சில முஸ்லிம் பெண்கள் அனுபவிக்கும் சிரமங்களை பதிலாக வைப்பர். சித்தாந்தத்தை பேசினால், நடைமுறைக்குத் தாவுவது, நடைமுறையைச் சொன்னால், சித்தாந்தத்தைக் கீறுவது என்கிற இவர்களின் மாய்மாலங்களை இன்று நேற்றா பார்த்து வருகிறோம்.

அபூ முஹைகளும் சலாஹுத்தீன்களும் அப்துல்லாஹ்களும் கேட்ட எதிர்க்கேள்விகளுக்கே இன்னும் பதிலளிக்காமல், துவேஷத்தைப் பரப்புவதையும் நிறுத்தாமல் செய்வதற்கு கொஞ்சமாவது 'நாணம்' இருக்கவேண்டும் என்று எம்மைப்போன்றோர் எதிர்பார்த்தால் தவறுமுண்டோ?

மற்றுமொரு அனுபவமாக, இஸ்லாம் பற்றிய விளக்கங்களை காதில் வாங்கிக்கொள்ள்( விரும்பா)மல் குற்றம் சுமத்திக் களிப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளவர்களில் பெரும்பாலோர் பிராமணர்களாகவே இருப்பது ஏன்? - என்ன காரணம்? - ஒரு ரவியையோ, ஸ்ரீனிவாசனையோ வைத்து இதை நாம் சொல்லவில்லை என்றாலும் கூட! (சில 'நேசர்'கள் விதி விலக்குத் தான்). கவனிக்கவும் பெரும்பாலோர் என்று தான் குறிப்பிட்டுள்ளேன், அனைவரையும் இல்லை.

அந்தப்பதிவின் ஜால்ராப் பின்னூட்டங்களில் பல எதிர்பார்த்தப்படியே அமைந்துள்ளதும், அப்பின்னூட்டங்களுக்கு பதிலளிக்கிறேன் பேர்வழி என்று வந்த 'நேசர்' இதற்கெல்லாம் 'இஸ்லாமிய மூலமே' காரணம் என்ற 'விவேகமான' கண்டுபிடிப்புகளை திரும்பத் திரும்ப ஊதுவதையும் காண முடிகிறது. (வாசகர்களே, குர்ஆனையும் நபிவழியையும் முடிந்தவரைப் பின்பற்றுகிற ஏராள பக்திமயமான முஸ்லிம்களை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அவர்களில் எத்தனைப் பேர் 'வன்முறையை'த் தூண்டுகிறார்கள் என்பதை நெஞ்சில் கை வைத்து உங்களுக்கு நீங்களே கேட்டுப்பாருங்கள்).

ஒரு அழகிய சுமூகமான விவாதத்தில் ஈடுபட முஸ்லிம்கள் எப்போதும் எங்கேயும் தயாராகவே உள்ளனர்.
'நேசத்தை' பெயரளவில் கொண்டுள்ளவர்கள் என்றால் முதலில் சலாஹுத்தீன்களும், அபூ முஹைகளும், அப்துல்லாஹ்களும் கேட்ட ஏராள எதிர்கேள்விகளுக்கு பதிலளித்துவிட்டு வரட்டும்.

காலம் காலமாக அடிமைச்சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தவன் மனநிலைப் பாதிப்பால் 'தங்கச்சங்கிலி' அணிந்து வருகிற அழகு நங்கையரைப் பார்த்து 'அய்யோ சங்கிலி, அய்யோ சங்கிலி" என்று அலறுவானல்லவா, அதையே ஒத்திருக்கிறது - இவர்களின் இஸ்லாம் மீதான அலறல்கள்.

ஒரு முஸ்லிமுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தன் தாய் தந்தையரை விட அதிக நேசத்துக்குரியவர்கள். அப்படியே ஒவ்வொரு மதத்தாருக்கும் இனத்தாருக்கும் யாரேனும் நேசத்துக்குரியவர்களாக இருக்கலாம். மறுப்பதற்கில்லை. எனவே, நாம் தமிழ் வலைப்பூ திரட்டி மேலாளர்களை கேட்டுக்கொள்வதெல்லாம், தாய் தந்தையர்களையும் குடும்ப உறுப்பினர்களையும் சம்பந்தப்படுத்தி மோசமாக எழுதுபவர்களின் பட்டியலில் இந்த மத துவேஷ காழ்ப்புணர்வாளர்களையும் வைக்க வேண்டும் என்பதைத் தான்.

மற்றபடி, எந்த மதம் பெண்ணுரிமை எந்தளவு அளித்திருக்கிறது? எந்த மதம் மனிதர்களை சமமாக நடத்துகிறது என்பது போல ஆக்கப்பூர்வமான விவாதங்கள் எனில் முஸ்லிம்கள் தயாராகவே இருக்கிறார்கள் எப்போதும்!

Saturday, November 12, 2005

நூல்களால் அறிவை நூற்போம்!

(நேற்று இட்ட பதிவு ஏனோ தென்படவில்லை. அதனால் மீண்டும் இடுகிறேன் --- நட்புடன், அபூஆதில்.)
நூலகம் என்பது அறிவின் நுழைவாயில் என்று சொன்னால் அது மிகையாகாது. கல்வி எப்படி வாழ்க்கைக்கு வழிகாட்டியோ, அதுபோல் கல்விக்கு நூலகம் ஒரு மிக முக்கிய வழிகாட்டி மையம். நூலகமும், கல்வியும் என்பது தாயும், சேயும் போல. ஒன்றிலிருந்து மற்றொன்று பரிணாமம் எடுக்கிறது.
அறிவை வளர்த்துக் கொள்ள முயலும் ஒவ்வொருவருக்கும் நூலகம் ஒரு வரமாகவே இருந்து வருகிறது. பண்டையக் காலத்திலிருந்தே பல அறிஞர்கள் பல்வேறு நூல்களை ஒன்றுதிரட்டி தனக்கென ஒரு நூலகம் அமைத்து அதிலிருந்து அறிவின் சுவையைப் பருகி வந்திருக்கிறார்கள். பள்ளிக்கூடங்களிலிருந்து, பல்கலைக்கழகம் வரை நூலகம் அமைத்து அறிவின் தேடலுக்கு வழி அமைத்திருக்கிறார்கள். அதுஅட்டுமல்லாமல், இன்று அரசாங்கமே பட்டிதொட்டியிலிருந்து, மெட்ரொபாலிடன் நகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் பொது நூலகம் அமைத்து செயல்பட்டு வருகிறது. அறிவைத் தேடுவதற்கு மட்டும் வயது வரம்பு என்பதே இல்லை.

அறிவின் தேடலை வலியுறுத்தும் விதமாக அனேக மேதைகள், சமூக சிந்தனையாளர்கள் கருத்து சொல்லியிருக்கிறார்கள். இஸ்லாம் கல்வியின் முக்கியத்துவத்தை மிக அதிகமாக வலியுறுத்தி வருகிறது. அல்லாஹ் தனது அருள்மறையாம் அல்-குர் ஆனில் பின்வருமாறு கூறுகிறான்:
"கற்றோரும், கல்லாதோரும் சமமாவார்களா? நிச்சயமாக நல்லுபதேசம் பெறுவோர் அறிவுடையோரே"
அத்தியாயம் 39; வசனம் 09
மேற்கண்ட குர் ஆன் வசனம் மூலம் கல்வியின் முக்கியத்துவத்தை இஸ்லாம் எந்த அளவுக்கு வலியுறுத்துகிறது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
ஒரு மனிதன் இவ்வுலகில் சிறப்புற்று வாழ்வதற்கும், முறையான பாதையைத் தேர்ந்தெடுத்து தனது வாழ்வை அமைத்துக் கொள்வதற்கும் கல்வியே மிக முக்கிய காரணமாக அமைகிறது. இதனை வலியுறுத்தும் விதமாக இறுதித் தூதர் முஹம்மத்(ஸல்...) அவர்கள், "அல்லாஹ் ஒருவனுக்கு நன்மையை நாடிவிட்டால் அவனுக்கு கல்வியறிவை வழங்கி விடுகிறான்" என்று கூறுகிறார்கள்.
இவ்வுலகில் எதை வேண்டுமானாலும் இழக்கத் தயாராகலாம். ஆனால், கல்வி அப்படியல்ல. பணம் தன்னைத் தேடி வரும்போது அதனை வெறுத்து வாழும் மனிதர்களை நாம் இவ்வுலகில் காண்கிறோம். பதவி தம்மை நாடி வரும்போது அதனை மறுத்து வாழும் மனிதர்களையும் நாம் காண்கிறோம். ஆனால், கல்வியைக் கற்றுக் கொள்ளும் விஷயத்தில் மனிதன் இயல்பாகவே ஒருவித தேட்டமுடையவனாகவே இருக்கிறான். எனவேதான், தான் பெறாத கல்வியை தன் சந்ததியாவது பெற வேண்டும் என்று பாமர மக்கள் கூட அதற்காக எதையும் இழக்கத் தயாராகிறார்கள்.
இஸ்லாம் எந்நிலையிலும் அறிவின் தேடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கிறது. இறுதித் தூதர் முஹம்மது (ஸல்....) அவர்களது காலத்தில் நடைபெற்ற ஒரு போரின்போது முஸ்லிம்களால் போர்க்கைதிகளாக பிடிக்கப்பட்ட எதிரிகளை விடுவிக்க, முஸ்லிம்களில் எழுத்தறிவில்லாதவர்களுக்கு அவர்கள் எழுதப் படிக்க கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதையே நிபந்தனையாக விதித்து எழுத்தறிவு இயக்கத்தை அன்றே ஆரம்பித்து வைத்த நபியவர்களின் ஒப்பற்ற நடைமுறை வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
எழுதப்படிக்கக் கற்றுக் கொள்வதோடு மட்டும் நமது கடமை முடிந்து விடுவதில்லை. கற்ற அறிவை முறையான வழிகளில் பயன்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும். ஒருவன் ஒரு சட்டையை வாங்கி அழகாக ஹாங்கரில் மாட்டி வைத்துக்கொண்டு என்னிடம் மிக அழகான சட்டை ஒன்று இருக்கிறது என்று கூறிக்கொண்டே வெற்று உடம்போடு திரிந்து கொண்டிருந்தானென்றால் அவனை நாம் அறிவுடையவனாக ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதுபோலவே, எழுதப்படிக்கத் தெரிந்த ஒருவன் அதைக் கொண்டு அறிவைத் தேடிப் பெற முயலாமல் இருந்தானேயானால் அவன் பெற்ற எழுத்தறிவால் அவனுக்கு எந்த பயனும் இருக்கப் போவதில்லை.
மிகச்சமீப காலம் வரை மக்களிடையே புத்தகம் படிக்கும் வழக்கம் அதிகமாக இருந்தது. இன்றோ நிலைமை தலைகீழ். ஆறிலிருந்து நூறு வரை தொலைக்காட்சி முன்பு அமர்ந்து கற்பனைக் கதாபாத்திரங்களுக்காக கண்ணீர் விட்டுக்கொண்டு வீட்டையே திரையரங்குகளாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். புத்தகம் படிக்கும் வழக்கமோ இரயில் பயணங்களோடு நின்று போய்விட்டது. அதனால்தானோ என்னவோ மக்களின் சிந்தனையும் விரிவடையாமல் தண்டவாளம் போலவே சென்று கொண்டிருக்கிறது. இந்நிலை மாற வேண்டும். நூல்களோடு நம் தொடர்பை வலுப்படுத்த வேண்டும். அடைபட்டிருக்கும் அறிவுக்கதவைத் திறக்க வேண்டும்.
அறிவு என்பது ஆடை போல. அதை அணிந்தால்தான் மனிதனுக்கு கண்ணியம் கிடைக்கும்.
நாம் அறிவெனும் ஆடையை நூல்களால் நூற்போம்.

Friday, October 07, 2005

பெண்ணுரிமைப் பேணுவோம்

சென்ற வாரத்தில் ஒரு நாள் 'அரப் நியூஸ்' பத்திரிக்கையை படித்தபோது கண்ணில் பட்ட ஒரு செய்தி நவீன தலைமுறை இளைஞர்களிடம் ஏற்பட்டிருக்கும் தறிகெட்ட தனத்தை பறைசாற்றியது. ரியாத் நகரில் சாலையில் நடந்து கொண்டிருந்த இரு பெண்களை சில இளைஞர்கள் பலாத்காரம் செய்து அதனை தனது கேமரா செல்பேசியில் பதிவு செய்ததாக வந்திருந்த செய்தி நாகரீக மனிதர்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இளைஞர்களின் சிந்தனையை இதுபோன்று பாழாக்குவதில் மேற்கத்திய ஊடகங்களும், அதனை முன்மாதிரியாகக் கொண்டு தன்னை வார்த்துக் கொண்டிருக்கும் மற்ற ஊடகங்களும் பெரும் பங்காற்றி வருகின்றன. “செல்”லுக்குள் நடந்து கொண்டிருந்த குற்றங்கள் இன்று சாலைக்குள் வலம்வரும் விபரீதத்தை இங்கு காணமுடிகிறது.

மிகவும் கண்ணியமான முறையில் உடையுடுத்தி சென்று கொண்டிருந்த பெண்களையே இவ்வாறு சீண்டிப் பார்க்கும்போது அரைகுறை ஆடையுடன் அங்கங்கள் தெரிய பவனி வரும் இன்றைய மங்கைகளின் விஷயத்தில் ஒன்றும் சொல்வதற்கில்லை.

முழுக்க முழுக்க ஆண்கள் பயன்படுத்தும் பொருட்களின் விளம்பரத்திற்குக் கூட பெண்களின் கவர்ச்சி அவசியம் என்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் இன்றைய நுகர்வுக் கலாச்சாரத்தின் பகட்டு வெளிச்சத்தை நோக்கி விட்டில் பூச்சிகளாக விரைந்து ஓடிக்கொண்டிருக்கும் நாகரீக! பெண்களை நினைத்து அழுவதா? சிரிப்பதா? என்று தெரியவில்லை.
பெண்கள் பெண்களாக வாழும்போதுதான் அவர்கள் முழு உரிமை பெற்றவர்களாக இருக்க முடியும். நான் எப்படியும் இருப்பேன் என்று அரைகுறை ஆடையுடன் வலம் வருபவர்கள், தனக்கு முறையாகக் கிடைக்க வேண்டிய கண்ணியம் என்ற தனது உரிமையை இழந்தவர்களாகவே ஆகமுடியும்.

பெண்களின் கண்ணியத்தையும், பாதுகாப்பையும் மேலும் உறுதிப்படுத்தவே இஸ்லாம் பர்தாவை அவசியமாக்கியிருக்கிறது என்பதை முதலில் உணர வேண்டும். பெண்களுக்கு பர்தா ஒரு சிறந்த, எளிய பாதுகாப்பு வளையம் என்பதை உணர்ந்ததாலேயே மேலைநாட்டைச் சேர்ந்த Tanya C. Hsu என்ற மத்திய கிழக்கு ஆய்வாளர் இப்படிக் குறிப்பிடுகிறார்:

“In Riyadh’s Bedu Souk I added a burqha and realized, for the first time in my adult life, men spoke directly to me rather than to a physique. That is respect.

ஆடையைக் குறைப்பதுதான் தான் பெறக்கூடிய மிகப்பெரும் உரிமை என்று நினைக்கும் விட்டில் பூச்சி பெண்வர்க்கமும், தன் உள்மனதில் உள்ள கீழ்த்தர ரசனை எனும் குரூரத்தை, பெண்ணுரிமைப் பாதுகாவலர்கள் என்ற போர்வையிட்டு மறைத்து வலம் வரும் ஆண்வர்க்கமும் இருக்கும் வரை கலாச்சாரச் சீரழிவை யாராலும் தடுக்க முடியாது.

சானியாவின் ஆடைக்கு வக்காலத்து வாங்கும் ஆடவர்கள் சொல்லும் வசனம் "ஆடையைப் பார்க்காதே; ஆட்டத்தைப் பார்" என்பது. ஒரு திரைப்படத்தைப் பார்க்க வருபவர்களில் கதைக்காக வருபவர்களும் உண்டு. கவர்ச்சிக்காக வருபவர்களும் உண்டு. இதுபோல்தான் எல்லா விஷயத்திலும். இதனைப் புரியாதவர்கள் போல் நடிப்பதும், சுட்டிக்காட்டுபவர்களை எழுத்துக்களால் தட்டிக் கேட்பதும் அவரவர் மன அழுக்குகளை வெளிப்படுத்துவதாகவே தெரிகிறது.

மாறிவரும் சூழ்நிலைக்கேற்ப நாமும் மாறுதலுக்குட்பட வேண்டும் என்று கூறுபவர்களில் ஆண்கள் யாரும் மக்கள் கூடும் இடங்களில் அரைக்கால் சட்டைகளோடு வலம் வருவதில்லை. மேலும் மேலும் ஆடைகளால் முழுவதும் மறைத்த வண்ணமே தோன்றுகிறார்கள். அதுதான் சிறந்த கலாச்சாரம் என்பதை உணர்ந்ததாலேயே இந்திய, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பொது இடங்களில் தோன்றும்போது நீளக்காற்சட்டை அணியுமாறு சில மாதங்களுக்கு முன்பு அறிவுறுத்தப்பட்டார்கள். அப்போது யாரும் அதற்கு எதிராக கூக்குரலிடவில்லை. ஏனென்றால், ஆண்களின் ஆடைக் குறைப்பில் அவர்களுக்கு எந்தத் தேவையும் இருக்கவில்லை.

பெண்கள் தங்கள் நிலையை உணர வேண்டும். ஆடையைக் குறைப்பதை விட்டு விட்டு தங்களை நோக்கி வரும் ஆப(அச)த்தைக் குறைப்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும். இதன் மூலம் அவர்கள் தங்கள் உரிமையை மீட்டுக்கொள்ள வேண்டும்.

Monday, August 22, 2005

எங்கே அந்த மானுட தர்மம்?

லகில் மிக அதிகமான கொலைகளைச் செய்தவர் யார் தெரியுமா?
அதுவரை உலகில் நிலவி வந்த போர் தர்மங்களையெல்லாம் ஒரே ஒரு "குட்டிப் பையன்"(Little Boy) மூலம் சிதறடித்த வரலாற்று நாயகன்தான் அவர். நாகரிகங்களைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு, சவக்காட்டில் சந்தோஷமாக உறங்கிய அதிசய மனிதனும் அவரே. நான் என்ற சொல்லில் மட்டுமல்ல, நாங்கள் என்ற சொல்லிலும் ஆணவத்தைப் பிரசவிக்க முடியும் என்று நிரூபித்த அவர் வேறு யாருமல்ல. வரையரையற்ற நீதி? வழங்கும் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ட்ரூமன் தான்.

இங்கே, உங்கள் பார்வைக்கு இருவேறு காட்சிகள் வைக்கப்படுகிறது. மானுட தர்மத்திற்கும், மமதைப் பிணிக்குமிடையே உள்ள பாரதூரமான வேறுபாட்டை இக்காட்சிகள் படம்பிடித்துக் காட்டுகிறது.

- அபூ ஆதில் -

இனி காட்சிக்குள்ளே...


"ஜனாதிபதி அவர்களே...! நேற்று இரவு நன்றாகத் தூங்கினீர்களா?" - இது செய்தியாளர்களின் கேள்வி.
"ஆமாம்...! எப்போதையும் விட நேற்று அமைதியாகத் தூங்கினேன். எங்கள் பரிசோதனை வெற்றி பெற்று விட்டது. இந்த உலகத்தில் நாங்கள்தான் இப்போது பலம் வாய்ந்தவர்கள்." - இப்படி பதில் சொன்னவர் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ட்ரூமன்.
இதற்கு முதல் நாள்தான் ஜப்பான் நகரங்கள் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது. நாகசாகி, ஹிரோஷிமா எனும் இரு நகரங்களும் வரைபடத்திலேயே இல்லாமல் ஆகிவிட்டன. எப்படிச் செத்தோம் என்று அறியாமலேயே இலட்சக்கணக்கான அப்பாவி மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போதே கொல்லப்பட்டார்கள்.
எல்லா வகையான போர் தர்மங்களையும், சர்வதேச சட்டங்களையும், மனித நாகரிகங்களையும் மீறி, உலகிற்கு தன் வல்லமையை நிரூபிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக நடத்தப்பட்ட கொடூரம் இது...!
அன்று வீசப்பட்ட அணுகுண்டுகளின் கதிர்வீச்சுக்களால் இன்றைக்கும் அந்த மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நுரையீரல் கோளாறுகள், புற்றுநோய், பிறவியிலேயே ஊனம் போன்ற பல நோய்கள் வாட்டி வருகின்றன.
இலட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்றொழித்த பிறகுதான் ஜனாதிபதி நிம்மதியாக உறங்கினாராம்...!

@ @ @ @ @ @

அது ஒரு போர்க்களம். அந்தக் களத்தில் ஒரு பெண்ணின் பிணம் கிடப்பதாகச் செய்தி வந்தது. அந்தச் செய்தியைக் கேட்டதும் நபிகள் நாயகம் (ஸல்...) அவர்கள் துடித்துப் போய் விட்டார்கள்.
அந்த இடத்துக்கு விரைந்தார். அந்தப் பெண்ணின் உடலைப் பார்த்தார். பிறகு முகம் சிவக்க, தம்மைச் சுற்றி இருப்பவர்களிடம் கேட்கிறார்கள். "இவள் போர் செய்யவில்லையே! பிறகு ஏன் இவள் கொலைக்கு ஆளானாள்? "இவ்வாறு கேட்டு, போர் சமயத்திலும் கூட அப்பாவி மக்கள் கொல்லப்படுவதைக் கடுமையாகக் கண்டித்தார்கள்.
மனிதத் தன்மைகள் அனைத்தும் மண்ணோடு மண்ணாகி விடும் கொடூரப் போர்க்களத்திலும் இஸ்லாம் மானுட நாகரிகத்தைக் கடைப்பிடித்தது. 1400 ஆண்டுகளுக்கு முன்பே அது மிக உயர்வான போர் ஒழுங்கு முறைகளை
வகுத்துத் தந்து விட்டது.
நபிகள் நாயகம் (ஸல்...) அவர்கள் கூறினார்கள்:
* போரில் பங்கு கொள்ளாத வயது முதிர்ந்தவர்கள், குழந்தைகள், பெண்கள் ஆகியோரைக் கொள்ளாதீர்கள்.
* மடங்களில் உள்ள துறவிகளையும், வணக்கத்தலங்களில் இருக்கும் மக்களையும் கொல்லாதீர்கள்.
* நெருப்பால் தண்டனை வழங்குவதற்கு நெருப்பின் அதிபதியைத் தவிர (இறைவனைத் தவிர) வேறு யாருக்கும் உரிமை கிடையாது.
* விளை நிலங்களையும், மக்கள் வாழும் பகுதிகளையும் அழிக்காதீர்கள்.
இப்படிப் பல கட்டளைகள், நெறிமுறைகள்!
இவை எல்லாவற்றையும் விட திருக்குர் ஆனில் ஓர் அருமையான வசனம் உண்டு. மனித உயிர்களை இஸ்லாம் எந்த அளவுக்கு மதிக்கிறது என்பதை அதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
" நியாயமின்றி ஒருவன் மற்றவனைக் கொலை செய்து விட்டால் அவன் மனிதர்கள் அனைவரையும் கொலை செய்தவன் போலாவான். எவன் ஒருவன் பிறிதொருவனுக்கு வாழ்வு அளிக்கின்றானோ அவன் எல்லா மனிதர்களுக்கும் வாழ்வு அளித்தவன் போலாவான்!"
(திருக்குர் ஆன் - 5:32)
அநியாயமாக மனித இரத்தம் சிந்தப்படுவதை இஸ்லாம் விரும்பவில்லை. ஆனால், தவிர்க்க முடியாத நிலையில் போர் மேகங்கள் சூழுமேயானால் அப்போதும் கூட அப்பாவி மக்கள் கொல்லப்படக் கூடாது என்பதில் இஸ்லாம் உறுதியாக உள்ளது.
ஜிஹாத்-புனிதப்போர் என்றெல்லாம் கூறிக் கொண்டிருப்பவர்களும் சரி, பன்னாட்டுத் தலைவர்களும் சரி - இஸ்லாம் கூறும் இந்த மானுட தர்மத்தைப் பின்பற்றினால் எவ்வளவு நன்றாக இருக்கும்...!
நன்றி: சிராஜுல் ஹஸன்.

Sunday, August 14, 2005

பொது? சிவில் சட்டம்

தேசத்தந்தை மஹாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேவின் வாரிசுகள், உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைப்பெற்ற இம்ரானாவின் சம்பவத்தை மையமாக வைத்து மீண்டும் ஒரு பழைய பல்லவியைப் பாட ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கீறல் விழுந்த ரெக்கார்டை மறுபடி Play பண்ண ஆரம்பித்திருக்கிறது தேச விரோத சங்பரிவார் அமைப்பு. எத்தனையோ முறை பதில் கொடுக்கப்பட்ட ஒரு விஷயமாக இருந்தாலும் கூட, மக்களின் மறதியைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் போக்கு மிகுந்து காணப்படும் இக்காலத்தில் அவ்வப்போது நாமும் அதுபற்றிய விளக்கத்தை சிந்திக்கும் பொது ஜனத்துக்கு சமர்ப்பிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

இவர்கள், அவ்வப்போது வரிந்து கட்டிக்கொண்டு முஸ்லிம்களை மையமாக வைத்து பொது சிவில் சட்டம் வேண்டும், பொது சிவில் சட்டம் வேண்டும் என்று வீர!முழக்கம் இடுவதைக் கேட்கும்போது உண்மையிலேயே இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் தனது அனைத்து விவகாரங்களுக்கும் தனக்கென தனி சட்டம் வைத்துக்கொண்டு தனியாக அரசாங்கம் நடத்துவதைப் போல் ஒரு மாயையை ஏற்படுத்தும். ஆனால், உண்மை நிலையோ வேறு.

இந்த நாட்டில் மதச்சார்பற்ற ஓர் அரசின் கீழ் சிறுபான்மையினராக வாழ்ந்து வரும் முஸ்லிம்களுக்கு திருமணம், தலாக், பாகப்பிரிவினை போன்ற சில விவகாரங்களுக்கு மட்டும் இந்திய நீதிமன்றங்கள் முஸ்லிம் தனியார் சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பளித்து வருகிறது. இதேபோல் இந்து, கிறிஸ்தவ, சீக்கிய, ஜைன, புத்த சமயத்தினருக்கும் அவர்களுக்கென்று தனியார் சட்டங்கள் அமலில் இருந்து வருகிறது. ஆனால்,குற்றவியல் நடைமுறைக்கு மட்டும் அனைத்து தரப்பினருக்கும் பொதுவான I.P.C. ( INDIAN PENAL CODE ) எனும் சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பளிக்கப்பட்டு வருகிறது.

இந்த தனியார் சட்டம் என்பது இந்தியாவுக்குப் புதிதல்ல. மொகலாய மன்னர்கள் என்று இந்தியாவில் தன் கால்களை ஊன்றினார்களோ, அன்றிலிருந்தே அவரவர்கள் சார்ந்திருந்த மதங்களுக்குரிய சட்டங்களின் அடிப்படையில் தீர்ப்பளிக்கப்பட்டு வந்தார்கள்.

அதன்பின், கி.பி. 1862-ல்தான் I.P.C. ( INDIAN PENAL CODE ) என்ற புதிய சட்ட முறையைக் கொண்டு வந்தார்கள். இதுவும் கூட இங்கிலாந்தின் சட்ட முறையினை அடிப்படையாகக் கொண்டே வரையறுக்கப்பட்டது. பின்னர், 1937-ல் முஸ்லிம் தனியார் சட்டம் ( MUSLIM PERSONAL LAW - Shariath Application Act - 1937 ) அமலுக்கு வந்தது. பின்னர், அதனைத் தொடர்ந்து 1939-ல் முஸ்லிம் திருமணச் சட்டம் ( MUSLIM MARRIAGES ACT - 1939 ) ஷரீஅத் சட்டத்தின் அடிப்படையில் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தது.

இந்த நிலை இன்று வரை நீடித்து வருகிறது என்றாலும்கூட, இன்றைய இந்தியாவில் இந்த முஸ்லிம் தனியார் சட்டம் மிகப்பெரும் துவேஷத்துக்கு ஆளாகி வருகிறது. பெரும்பான்மையினரின் மதத்தின் மீது வெறியூட்டி இஸ்லாத்திற்கெதிராக மாபெரும் சூழ்ச்சிகளையும் சதித்திட்டங்களையும் தீட்டிவரும் சங்பரிவார்களின் அரசியல் ரூபமான பி.ஜே.பி- யின் தலை?வர்கள், முஸ்லிம்களுக்குள் பிரச்சினை ஏற்படும்போதெல்லாம் அதனைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பொது சிவில் சட்டம் வேண்டும் என்று கூப்பாடு போட்டு வருகிறார்கள்.

சங்பரிவார்கள் கூறுகிறார்கள்: "இந்திய முஸ்லிம்கள் குற்றவியல் நடைமுறைகளில் எவ்வாறு I.P.C. ( INDIAN PENAL CODE ) என்ற பொதுவான சட்டத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார்களோ, அவ்வாறே அனைத்து விஷயங்களிலும் ஷரீஅத்தைக் கைவிட்டு விட்டு பொது சிவில் சட்டத்தை ஏற்றுக் கொள்ளலாமே" என்று. இவர்களின் இந்தப் புலம்பலுக்கு ஒரு இஸ்லாமிய அறிஞரின் கூற்றையே பதிலாக வைக்கிறேன். "ஓர் அறையில் காற்றோட்டத்திற்காக வைக்கப்பட்டிருக்கும் இரு ஜன்னல்களில் ஒன்று மூடியிருப்பதைக் கண்டு அதுபோல் மற்றொன்றையும் மூடிவிடலாம் என்று எண்ணுவது பேதமை அல்லவா?.

சிவில் சட்டங்களுக்கும், கிரிமினல் சட்டங்களுக்குமிடையில் மிகப்பெரும் வேறுபாடு உண்டு. கிரிமினல் விஷயங்கள் நேரடியாக நீதிமன்றங்களால் தீர்க்கப்படக்கூடிய ஒன்று. ஆனால், சிவில் விஷயங்கள் அப்படியல்ல. சிவில் விஷயங்களை நீதிமன்றத்துக்கு வெளியில் மக்கள் மன்றத்திலும் தீர்த்துக்கொள்ள முடியும். உதாரணமாக, ஒருவன் மற்றொருவனைக் கொலை செய்து விடுகிறானென்றால் அவனுடைய பிரச்சினையை எவ்விதத்திலும் நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்த்துக்கொள்ள முடியாது. அதை அரசாங்கம் அனுமதிக்கவும் செய்யாது.

ஆனால், திருமணம், தலாக், பாகப்பிரிவினை போன்ற சிவில் விவகாரங்களில் சம்பந்தப்பட்டவர்கள் விரும்பினால் அதை நீதிமன்றத்துக்கு வெளியிலும் தீர்த்துக்கொள்ள முடியும். இதை அரசாங்கம் கட்டுப்படுத்த முடியாது. மேலும், இது போன்ற சிவில் விவகாரங்கள் முழுக்க முழுக்க முஸ்லிம்களின் உள் விவகாரங்கள். முஸ்லிம்களுக்கிடையே தீர்ப்பளிக்கப்படும் எந்த விஷயமும் மற்றவர்களை, மாற்றுமதத்தினரை எவ்விதத்திலும் பாதிப்பதில்லை.

இந்நிலையில், திருமணம், தலாக், பாகப்பிரிவினை போன்ற விவகாரங்களில் பொது சிவில் சட்டம் கோருவோரின் நோக்கம் அப்பழுக்கற்ற இஸ்லாமிய விரோத மனப்பான்மையே என்பதில் ஊசிமுனையளவும் சந்தேகமில்லை. முதலில் ஒரு விஷயத்தை ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது என்று முடிவு செய்வதாகயிருந்தால், அதற்கான சரியான காரணம் ஒன்று இருக்க வேண்டும். இவர்கள் பொது சிவில் சட்ட விஷயத்தில் எந்த ஒரு வலுவான காரணத்தையும் இதுவரை வைக்க முடியவில்லை. இவர்களால் சுட்டிக்காட்ட முடிந்ததெல்லாம் ஒரு ஷாபானு வழக்கு மட்டுமே. அதுவும்கூட அரசியல் காரணங்களால் சந்திக்கு வந்த ஒரு விஷயம் என்பதை ஊடகங்களுடன் தொடர்புடையவர்கள் நன்றாக அறிவார்கள். அதுமட்டுமல்லாமல், முஸ்லிம்களுக்குள்ளே நடக்கும் எந்த விவகாரத்திலும் அந்த சமுதாயம் மற்றவர்களைத் துணைக்கு அழைப்பதில்லை. அதற்குத் தேவையும் இருக்கவில்லை. ஆனால், அழையா விருந்தாளிகளாக முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்குள் நீலிக்கண்ணீர் வடித்துக்கொண்டு நுழையும் சங்பரிவார்கள் உடனே கையில் எடுக்கும் விஷயம் பொது சிவில் சட்டம் வேண்டும் என்பதுதான்.

இவர்களின் இந்த மனப்பான்மையைச் சற்று சிந்தித்துப்பார்த்தால், அடுத்த வீட்டுக்காரன் மீது ஆளுமை செலுத்தத் துடிக்கும் அதிகாரப் போக்குதான் இங்கு வெளிப்படுகிறது. எனது அடுத்த வீட்டுக்காரர் ஐயங்கார் என்று தெரிந்தும் அவரை, நான் சாப்பிடுவதைப் போல் மீனையும் இறைச்சியையும் சாப்பிடு என்றோ அல்லது நாமிருவரும் பொதுவாக இன்றிலிருந்து முட்டை சாப்பிடுவோம் என்றோ கூறுவது அடுத்த வீட்டுக்காரரை நமக்கு எதிராகத் தூண்டுமே தவிர இணக்கமாக வாழ்வதற்குரிய வழி அதுவாக இருக்க முடியாது. எப்படி ஒரு வீட்டில் மாறுபட்ட குணாதிசயங்களைக் கொண்ட சகோதர, சகோதரிகளோடு அவர்களது மனப்பான்மையை அறிந்து நடந்து கொண்டு குடும்ப ஒற்றுமையைக் காக்கிறோமோ, அதுபோல் பன்முகக் கலாச்சாரம் கொண்ட ஒரு நாட்டில் வாழும் நாம், ஒருவர் மற்றவரது கலாச்சாரத்தை மதித்து நடந்து கொள்ளும்போதுதான் இந்நாட்டில் சமூக ஒற்றுமையைக் காக்க முடியும். சமூக ஒற்றுமை ஒரு நாட்டில் மேலோங்கும்போதுதான் அந்நாடு ஒட்டுமொத்த வளர்ச்சியை நோக்கிச் செல்ல முடியும்.

மேலும், பால்ய விவாகம், உடன்கட்டை ஏறுதல் போன்ற சமூக விரோத நடவடிக்கைகளுக்கு அரசியல் சாசனத்தில் அவற்றைத் தடுத்து சட்டமியற்றப்பட்டும் கூட மறைமுகமாக வக்காலத்து வாங்கும் சங்பரிவார்கள் பொது சிவில் சட்ட விஷயத்தில் மட்டும் தங்களை அரசியல் சாசன பாதுகாவலர்களாக காட்டிக் கொள்ள முனைந்து நிற்கிறார்கள். அதிலும் அவர்கள் தோல்வியையே சந்திப்பார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

பொது சிவில் சட்ட விஷயத்தில் தங்களை அரசியல் சாசன பாதுகாவலர்களாக அறிமுகப்படுத்திக் கொள்வதற்கு அரசியல் சாசன வரிகளையே ஆதாரம் காட்டுகிறார்கள். அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசியல் சாசன பிரிவு 44-ல் உள்ள வழிகாட்டிக் கொள்கையில் கூறப்படும் "நாட்டிலுள்ள எல்லாக் குடிமக்களுக்கும் பொதுவான ஒரு சிவில் சட்டம் உருவாக்கிட முயல வேண்டும்" என்ற வரிகளையே சுட்டிக் காட்டுகின்றார்கள். இது ஒரு வழிகாட்டிக் கொள்கைதானே தவிர அரசியல் சாசன சட்டம் அல்ல.

இம்மாதிரியான வழிகாட்டிக் கொள்கைகளையெல்லாம் சட்டமாக்கிட ஆவல் கொண்டிருந்தால் முதலில் மதுவிலக்கு சம்மந்தமான அரசியல் சாசன வழிகாட்டிக் கொள்கையை சட்டமாக்கிட முனைந்திருக்க வேண்டும். மது என்பது அனைத்து சாராரும், அனைத்து மதத்தவரும் எதிர்க்கக்கூடிய, சமூக நலனில் அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் அழித்தொழிக்க விரும்பும் ஒரு விஷயம். ஆனால் நடப்பதென்ன? இன்று பல மாநில அரசுகளே மதுக்கடைகளை திறந்து வைத்து மாபெரும் ஒழுக்க சீர்கேட்டிற்கு அடித்தளம் அமைத்துக் கொண்டிருக்கிறது. அவற்றையெல்லாம் புறந்தள்ளி விட்டு முழுக்க முழுக்க முஸ்லிம்களின் உள்விவகாரமான ஷரீஅத்தை மாற்றி பொது சிவில் சட்டம் கொண்டு வரவேண்டுமென்று கூப்பாடு போடுவது எவ்வளவு பெரிய விஷமத்தனம் என்பதை நாட்டு மக்கள் அனைவருமே நன்றாக உணர்ந்திட வேண்டும்.

மேலும், இந்த சங்பரிவார்களின் கூக்குரல் இந்திய அரசியல் சாசனத்திற்கே முற்றிலும் விரோதமானது என்பதைக்கூட வசதியாக மறந்து விட்டது இந்த கும்பல். இந்திய அரசியல் சாசனம் பிரிவு 25-ல், "எல்லாக் குடிமக்களும் மனசாட்சி சுதந்திரத்திற்குச் சமமான உரிமை பெற்றவர்கள். தனக்கு விருப்பமான மதத்தில் நம்பிக்கை கொண்டு, அதனை ஏற்றுக்கொண்டு அமல் செய்யவும், அதனைப் பிரச்சாரம் செய்யவும் எல்லாக் குடிமக்களுக்கும் உரிமை உண்டு." எனக் கூறுகிறது. இதன்படி, எந்த ஒரு மதத்தினர் மீதும் யாரும் அவரவர்களுடைய மதச்சட்டங்களையோ, நடைமுறைகளையோ கைவிடும்படி எந்தவிதத்திலும் நிர்ப்பந்திக்க முடியாது. அப்படித் திணிக்கும் பட்சத்தில் அது இந்தியாவில் சிறுபான்மையினர்கள் தன் உரிமைகளை நிலைநாட்டிக்கொள்வதற்கான உரிமைப்புரட்சி வெடிக்கக் காரணமாகிவிடும். இந்த உண்மையை சங்பரிவார்களின் தலைமையே ஒருமுறை ஒப்புக்கொண்டதுதான் சிறப்பு.

MOTHER LAND என்ற பத்திரிக்கையில் 21/08/1972 அன்று வெளியான ஒரு செய்தியில், "ஆர்.எஸ்.எஸ் தலைவரான குரு கோல்வால்கர், 1972 ஆகஸ்ட் 20-ல் தீனதயாள் உபாத்யாயா ஆராய்ச்சிக்கழகத்தைத் துவக்கி வைத்துப் பேசியபோது,'பாரதத்தில் தேசிய ஒற்றுமையை உருவாக்கப் பொது சிவில் சட்டம்தான் கருவியாகும் என்று சொல்வது தவறு; இயற்கைக்கு விரோதமானது; விபரீத விளைவுகள் உண்டாக்கக் கூடியது.' என்று அறிவுறுத்தி இருக்கிறார்" என்று தெரிவிக்கிறது. ஆனால், தன் தலைமையின் கருத்தையே புறக்கணித்து விட்டு இன்று பொது சிவில் சட்டம் வேண்டும் என்று ஓலமிடுகிறது சங்பரிவார் கும்பல்.

இந்நாட்டின் சிறுபான்மையினர்கள் எவ்விதத்திலும் தங்கள் மத சுதந்திரத்தை இழந்து விடக்கூடாது என்பதைக் கருத்திற்கொண்டே, அரசியல் சாசனத்தை வகுத்தளித்த சிந்தனையாளர்கள் சாசனத்தின் 25-வது பிரிவை ஏற்படுத்தி வைத்தார்கள். பொது சிவில் சட்டத்தைப் பாராளுமன்றம் அங்கீகரிக்க முயன்றால் அது பாராளுமன்றத்தில் பெரும்பான்மையாக உள்ள இந்துக்களின் விருப்பத்திற்கேற்ப, அவர்களின் கலாச்சாரத்தை ஒட்டிய சட்டமாகவே அமையும். அவ்வாறாகும் பட்சத்தில் அதை பொது சிவில் சட்டம் (COMMON CIVIL CODE) என்று சொல்வதைவிட ஹிந்து சிவில் சட்டம் (HINDU CIVIL CODE) என்று அழைப்பதே பொருத்தமாயிருக்கும்.

பொது சிவில் சட்டம் என்ற வார்த்தை பாமர மக்களைக் கவர வசதியான பெயராக அமைந்து விட்டது. ஆனாலும் அவர்களது எண்ணம் ஈடேறப்போவதில்லை என்பதை மட்டும் இப்போதைக்கு சொல்லி வைப்போம்.

Monday, August 08, 2005

உள்ளத்தை உலுக்கிய கேள்வி...

(பணம் சம்பாதிப்பதை மட்டுமே தன் வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டு, வாழ்வின் மென்மையான உணர்வுகளைக் கருகவிட்டுவிட்டு தன் கடைசி நாட்களில் எல்லாமிருந்தும் ஒன்றுமில்லாதவனாக தனிமைப்படுத்தப்படும் அ(ட)ப்பாவிகளுக்கு நினைவுறுத்தலாக...)

அது ஒரு கற்பனைக்கதை தான் என்றாலும் கருத்தாழம் மிக்கதொரு கதை. சிட்டுக்குருவி ஒன்று குளிர்காலத்தில் கதகதப்பாக வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டது. சின்னச்சின்ன குச்சிகளை அதற்கென இளவேனில் காலம் தொட்டே சேகரிக்கத் துவங்கியது. அந்தோ பரிதாபம்! குளிர் காலம் வருமுன்பே குச்சி சேகரிக்கும் முயற்சியில் தன் இன்னுயிரினை மாய்த்துக்கொண்டது. அதேபோன்று வளமோடு வாழ வேண்டும் என்ற ஆசையினால் உந்தப்பட்ட மனிதன் பொருளீட்டும் முயற்சியிலேயே வாழ்வைத் தொலைத்து விட்டு அல்லலுறும் காட்சிகள் இன்றைய நிதர்சனம்.

அலுத்துச் சலித்துப்போய் நேரம் கழித்து வீடு திரும்பிய அவர் தனக்காகத் தன் ஐந்து வயது மகன் கதவருகே காத்திருந்ததைக் கண்டு எரிச்சல் அடைந்தார்.

"அப்பா! நான் உங்களிடம் ஒன்று கேட்கலாமா?"

"கண்டிப்பாகக் கேட்கலாம். என்ன அது?" தந்தை கேட்டார்.

"அப்பா, ஒரு மணி நேரத்தில் நீங்கள் எவ்வளவு சம்பாதிப்பீர்கள்?"

"இது உனக்குத் தேவையற்ற கேள்வி. இதைக் கேட்பதற்கு என்ன காரணம்?" கோபத்தைக் கொப்பளித்தார் தந்தை.

"சும்மாதான். நான் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு மணி நேரத்தில் நீங்கள் எவ்வளவு சம்பாதிப்பீர்கள் என்பதைத் தயவு செய்து சொல்லுங்களேன்" கெஞ்சினான் மகன்.

"நீ அவசியம் தெரிந்து கொள்ள வேண்டுமானால் சொல்லுகிறேன். ஒரு மணிநேரத்தில் நான் 20 டாலர்கள் சம்பாதிப்பேன்."

தலையைக் குனிந்துகொண்டே "ஓ! அப்படியா" என்ற மகன் தலையைச் சற்றே நிமிர்த்தி "எனக்கு நீங்கள் 10 டாலர்கள் கடன் தர முடியுமா?" என்றான்.

"உனக்கு ஏதோ விளையாட்டுச் சாமான் வாங்கவோ அல்லது தேவையற்ற வீண் செலவு செய்யவோ காசு வெண்டும். அதை என்னிடமிருந்து வாங்குவதற்காகத்தான் நான் எவ்வளவு சம்பாதிக்கிறேன் என்று கேட்கின்றாயோ? நேரே உன்னுடைய அறைக்குச் சென்று படுத்துக் கொள். நீ ஏன் இவ்வளவு சுயநலக்காரனாக இருக்கிறாய் என்று யோசித்துப்பார். நேரம் காலம் இல்லாம நான் வேலை செஞ்சுக்கிட்டிருக்கேன். இந்த மாதிரி சின்னத்தனமான விளையாட்டுக்கெல்லாம் எனக்கு நேரமில்லை."

அச்சிறுவன் அமைதியாக தன் அறைக்குச் சென்று கதவைச் சாத்திக் கொண்டான். தந்தை கீழே அமர்ந்தார். அவருடைய கோபம் தணியவில்லை. "ஏதோ பணம் வேண்டும் என்பதற்காக என்ன கேள்வி கேட்கிறான் இந்தப் பயல்?" அவருடைய உள்ளம் குமுறியது. ஏறத்தாழ ஒரு மணி நேரம் கடந்த பின், சற்றே அமைதி அடைந்தவராக சிந்திக்கத் துவங்கினார். "அவனிடம் கடுமையாக நடந்து கொண்டோமோ? அவன் அப்படி அடிக்கடி பணம் கேட்பவன் இல்லையே. உண்மையிலேயே அந்தப் பத்து டாலருக்கு அவனுக்குத் தேவையான ஏதாவது வாங்க வேண்டும் என விரும்பியிருப்பானோ" இவ்வாறு சிந்தித்தவராக அவனுடைய அறைக்கதவைத் திறந்தார்.

"தூங்கிட்டியாடா பையா?" என்றார்.

"இல்லேப்பா. முழிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன்" என்றான் மகன்.

"இப்படியே யோசிச்சுப் பார்த்தேன். நான் உன்னிடம் கொஞ்சம் கடுமையாக நடந்து கொண்டேனோ? இன்னைக்குக் கொஞ்சம் வேலை அதிகம். என் எரிச்சலையும் கோபத்தையும் உன்னிடம் காட்டி விட்டேன். இந்தா நீ கேட்ட 10 டாலர்."

மகிழ்ச்சியோடு படுக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்த சிறுவன் "ந்ன்றி அப்பா" என்று கூறிக்கொண்டே தன் தலையணைக்குக் கீழிருந்து கசங்கிப் போயிருந்த டாலர் நோட்டுக்கள் சிலவற்றை வெளியில் எடுத்தான். அச்சிறுவன் மெதுவாகத் தன்னிடமிருந்த பணத்தை எண்ணிக்கொண்டே தன் தந்தையை நோக்கினான். தன்னிடம் கொஞ்சம் பணத்தை வைத்துக்கொண்டே மீண்டும் தன்னிடம் மகன் பணம் கேட்டிருக்கின்றான் என்பதை அறிந்த தந்தைக்கு மீண்டும் கோபம் வந்தது.

"அதுதான் பணம் வச்சிருக்கியே. திரும்ப பணம் ஏன் கேட்கிறாய்?" கொந்தளித்தார் தந்தை.

"ஏன்னா போதுமான அளவு இல்லை. இப்ப இருக்கு." மகன் துணிவுடன் சொன்னான்.

"அப்பா! இப்போ என்னிடம் 20 டாலர்கள் இருக்கு... உங்களின் ஒரு மணி நேரத்தை நான் இப்ப வாங்கலாமா?"

நன்றி: தாஜ்மணாளன்

Monday, August 01, 2005

ஊடகங்களின் போக்கு

ம்ரானா விஷயத்தில் ஊடகங்கள் காட்டி வரும் அக்கறை சொல்லி மாளாது. ஆடு நனையுதே என்று ஓநாய் அழுத கதைதான். வெரும் வாயைக் கூட மென்று கொண்டிருப்பவர்களுக்கு தேவ்பந்தின் தீர்ப்பு அவலாகக் கிடைக்கும்போது சொல்லவா வேண்டும்.

இது மாதிரி நேரங்களிலெல்லாம் ஊடகங்கள் தன்னை சிறுபான்மையினத் தோழனாக காட்டிக்கொள்ள முயலும். பாதிக்கப்பட்ட முஸ்லிமுக்காக களத்தில் குதிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு குட்டையைக் குழப்ப ஆரம்பித்துவிடும். அதைத்தான் இம்ரானா விஷயத்திலும் செய்து வருகிறது. விட்டில் பூச்சிகளைப்போல் சில முஸ்லிம்கள் அதில் மயங்கிப்போவதும் உண்டு.

தேவ்பந்த் போன்ற பாரம்பரியமிக்க மத்ரஸாக்கள் இன்னமும் கவைக்குதவாத மத்ஹபு சட்டங்களைக் கையில் வைத்துக்கொண்டு தீர்ப்பு சொல்கிறேன் பேர்வழி என்று அவ்வப்போது தப்பாட்டம் ஆடுவது கண்டிக்கத்தக்கது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

இந்த விஷயத்தில் தமிழகம் முன்னோடியாக இருப்பது கவனத்திற்குரியது. இந்த மாதிரி தவறான தீர்ப்புகள் கொடுக்கப்படும் நேரங்களில், முஸ்லிம்கள் இதை ஆதரிக்கிறார்கள் என்று ஓலமிடுபவர்களுக்கு சாட்டையடி கொடுப்பது போல் தமிழக முஸ்லிம் அமைப்புகள் ஒருமித்து குரல் கொடுத்திருக்கிறது.

இஸ்லாம் பெண்களின் திருமண விஷயத்தில் முழுக்க முழுக்க சம்பந்தப்பட்ட பெண்ணின் கருத்துக்கே முக்கியத்துவம் அளிக்கிறது. எனவே, இம்ரானாவின் விருப்பத்திற்கு மாற்றமாக தேவ்பந்த் கொடுத்த தீர்ப்பை செயல்படுத்தத் தேவையில்லை என்பதை அனைவரும் அறிய முடியும்.

இந்த நிலையில் இம்ரானாவின் விஷயத்தில் இஸ்லாமியச் சட்டங்கள் அநீதி இழைத்து விட்டதைப் போல் காட்டிக்கொண்டு பொது சிவில் சட்டம் வேண்டும் என்று மீண்டும் ஊடகங்கள் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் கோஷமிட ஆரம்பித்திருப்பது வேடிக்கைக்குரியது.

முஸ்லிம்களைப் பற்றிய விவகாரம் என்றாலே ஊடகங்கள் காமாலைக் கண் கொண்டு பார்ப்பதுதான் ஏன் என்று விளங்கவில்லை. இம்ரானா போன்றவர்களின் விஷயங்களில் அளவுக்கதிகமாக மூக்கை நீட்டி பக்கம் பக்கமாக எழுதி தன் மன அரிப்பை நீக்கிக்கொள்கிற பத்திரிக்கைகள் ரூப்கன்வர் போன்ற பெண்களின் விஷயத்தில் இதுவும் ஒரு செய்தி என்ற அளவிலே நின்று விடுவது வியப்பிற்குரியது.

மனுதர்மத்தை உயர்த்திப்பிடிக்கும் காவிச்சிந்தனை ஊடகங்கள் பொது சிவில் சட்டம் கேட்டு கூப்பாடு போடுவதும், அதற்குத் துணையாக ஷபனா ஆஸ்மி போன்ற முஸ்லிம் பெயர் தாங்கிகளைத் தன்னோடு சேர்த்துக் கொள்வதுமான இவர்களின் பொய் முகத்தை நடுநிலையாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் நன்றாகவே புரிந்து வைத்துள்ளார்கள்.

எனவே, சிந்தனைத் தாக்கத்தில் பெரும் பங்காற்றி வரும் செய்தி ஊடகங்கள் தனது நிலையை மாற்றி நடுநிலைக்குத் திரும்பினாலே சமூகத்தில் பெருமளவு பிரச்சினைகள் குறையும்.