என்னோடு

என்னோடு உங்களை இணைக்கும் எண்ணங்களோடு...

Monday, August 08, 2005

உள்ளத்தை உலுக்கிய கேள்வி...

(பணம் சம்பாதிப்பதை மட்டுமே தன் வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டு, வாழ்வின் மென்மையான உணர்வுகளைக் கருகவிட்டுவிட்டு தன் கடைசி நாட்களில் எல்லாமிருந்தும் ஒன்றுமில்லாதவனாக தனிமைப்படுத்தப்படும் அ(ட)ப்பாவிகளுக்கு நினைவுறுத்தலாக...)

அது ஒரு கற்பனைக்கதை தான் என்றாலும் கருத்தாழம் மிக்கதொரு கதை. சிட்டுக்குருவி ஒன்று குளிர்காலத்தில் கதகதப்பாக வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டது. சின்னச்சின்ன குச்சிகளை அதற்கென இளவேனில் காலம் தொட்டே சேகரிக்கத் துவங்கியது. அந்தோ பரிதாபம்! குளிர் காலம் வருமுன்பே குச்சி சேகரிக்கும் முயற்சியில் தன் இன்னுயிரினை மாய்த்துக்கொண்டது. அதேபோன்று வளமோடு வாழ வேண்டும் என்ற ஆசையினால் உந்தப்பட்ட மனிதன் பொருளீட்டும் முயற்சியிலேயே வாழ்வைத் தொலைத்து விட்டு அல்லலுறும் காட்சிகள் இன்றைய நிதர்சனம்.

அலுத்துச் சலித்துப்போய் நேரம் கழித்து வீடு திரும்பிய அவர் தனக்காகத் தன் ஐந்து வயது மகன் கதவருகே காத்திருந்ததைக் கண்டு எரிச்சல் அடைந்தார்.

"அப்பா! நான் உங்களிடம் ஒன்று கேட்கலாமா?"

"கண்டிப்பாகக் கேட்கலாம். என்ன அது?" தந்தை கேட்டார்.

"அப்பா, ஒரு மணி நேரத்தில் நீங்கள் எவ்வளவு சம்பாதிப்பீர்கள்?"

"இது உனக்குத் தேவையற்ற கேள்வி. இதைக் கேட்பதற்கு என்ன காரணம்?" கோபத்தைக் கொப்பளித்தார் தந்தை.

"சும்மாதான். நான் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு மணி நேரத்தில் நீங்கள் எவ்வளவு சம்பாதிப்பீர்கள் என்பதைத் தயவு செய்து சொல்லுங்களேன்" கெஞ்சினான் மகன்.

"நீ அவசியம் தெரிந்து கொள்ள வேண்டுமானால் சொல்லுகிறேன். ஒரு மணிநேரத்தில் நான் 20 டாலர்கள் சம்பாதிப்பேன்."

தலையைக் குனிந்துகொண்டே "ஓ! அப்படியா" என்ற மகன் தலையைச் சற்றே நிமிர்த்தி "எனக்கு நீங்கள் 10 டாலர்கள் கடன் தர முடியுமா?" என்றான்.

"உனக்கு ஏதோ விளையாட்டுச் சாமான் வாங்கவோ அல்லது தேவையற்ற வீண் செலவு செய்யவோ காசு வெண்டும். அதை என்னிடமிருந்து வாங்குவதற்காகத்தான் நான் எவ்வளவு சம்பாதிக்கிறேன் என்று கேட்கின்றாயோ? நேரே உன்னுடைய அறைக்குச் சென்று படுத்துக் கொள். நீ ஏன் இவ்வளவு சுயநலக்காரனாக இருக்கிறாய் என்று யோசித்துப்பார். நேரம் காலம் இல்லாம நான் வேலை செஞ்சுக்கிட்டிருக்கேன். இந்த மாதிரி சின்னத்தனமான விளையாட்டுக்கெல்லாம் எனக்கு நேரமில்லை."

அச்சிறுவன் அமைதியாக தன் அறைக்குச் சென்று கதவைச் சாத்திக் கொண்டான். தந்தை கீழே அமர்ந்தார். அவருடைய கோபம் தணியவில்லை. "ஏதோ பணம் வேண்டும் என்பதற்காக என்ன கேள்வி கேட்கிறான் இந்தப் பயல்?" அவருடைய உள்ளம் குமுறியது. ஏறத்தாழ ஒரு மணி நேரம் கடந்த பின், சற்றே அமைதி அடைந்தவராக சிந்திக்கத் துவங்கினார். "அவனிடம் கடுமையாக நடந்து கொண்டோமோ? அவன் அப்படி அடிக்கடி பணம் கேட்பவன் இல்லையே. உண்மையிலேயே அந்தப் பத்து டாலருக்கு அவனுக்குத் தேவையான ஏதாவது வாங்க வேண்டும் என விரும்பியிருப்பானோ" இவ்வாறு சிந்தித்தவராக அவனுடைய அறைக்கதவைத் திறந்தார்.

"தூங்கிட்டியாடா பையா?" என்றார்.

"இல்லேப்பா. முழிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன்" என்றான் மகன்.

"இப்படியே யோசிச்சுப் பார்த்தேன். நான் உன்னிடம் கொஞ்சம் கடுமையாக நடந்து கொண்டேனோ? இன்னைக்குக் கொஞ்சம் வேலை அதிகம். என் எரிச்சலையும் கோபத்தையும் உன்னிடம் காட்டி விட்டேன். இந்தா நீ கேட்ட 10 டாலர்."

மகிழ்ச்சியோடு படுக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்த சிறுவன் "ந்ன்றி அப்பா" என்று கூறிக்கொண்டே தன் தலையணைக்குக் கீழிருந்து கசங்கிப் போயிருந்த டாலர் நோட்டுக்கள் சிலவற்றை வெளியில் எடுத்தான். அச்சிறுவன் மெதுவாகத் தன்னிடமிருந்த பணத்தை எண்ணிக்கொண்டே தன் தந்தையை நோக்கினான். தன்னிடம் கொஞ்சம் பணத்தை வைத்துக்கொண்டே மீண்டும் தன்னிடம் மகன் பணம் கேட்டிருக்கின்றான் என்பதை அறிந்த தந்தைக்கு மீண்டும் கோபம் வந்தது.

"அதுதான் பணம் வச்சிருக்கியே. திரும்ப பணம் ஏன் கேட்கிறாய்?" கொந்தளித்தார் தந்தை.

"ஏன்னா போதுமான அளவு இல்லை. இப்ப இருக்கு." மகன் துணிவுடன் சொன்னான்.

"அப்பா! இப்போ என்னிடம் 20 டாலர்கள் இருக்கு... உங்களின் ஒரு மணி நேரத்தை நான் இப்ப வாங்கலாமா?"

நன்றி: தாஜ்மணாளன்

14 Comments:

Blogger inomeno said...

Though I read already..good to read it again..
Thanks.

August 10, 2005 9:11 PM  
Blogger சுட்டுவிரல் said...

Good Thought!
Thanks

August 11, 2005 12:00 AM  
Blogger நல்லடியார் said...

தமிழ்மணத்தில் முஸ்லிம் வலைஞர்கள் 'இஸ்லாம்'பற்றி மட்டுமே எழுதுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை நீங்கள் தகர்ப்பீர்கள் என்ற நம்பிக்கை வந்துள்ளது.

மனதைத் தொடும் மறுபதிவுக்கதையை எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள் அபூ ஆதில் ஆசாத்! தொடருங்கள்.

August 11, 2005 12:35 AM  
Blogger G.Ragavan said...

அற்புதமான கதை அபூ. அலுவலக-இல்ல-நேரங்காத்தலை முறையாகக் கையாளும் பக்குவம் அனைவருக்கும் வரவேண்டும். இல்லையென்றால்...நீங்கள் சொன்ன தனிமைப்பட்டு..........

August 11, 2005 12:44 AM  
Blogger Abuaadhil said...

inemno, சுட்டுவிரல், நல்லடியார், g.ragavan அனைவருக்கும் நன்றி.
நல்லடியார் அவர்களே, படைத்தவன் நாடினால் உங்கள் நம்பிக்கை வீண் போகாது.

August 11, 2005 1:25 AM  
Blogger புலிப்பாண்டி said...

//என்னோடு உங்களை இணைக்கும் எண்ணங்களோடு...//
தலைப்பே அருமை...

//பணம் சம்பாதிப்பதை மட்டுமே தன் வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டு, வாழ்வின் மென்மையான உணர்வுகளைக் கருகவிட்டுவிட்டு தன் கடைசி நாட்களில் எல்லாமிருந்தும் ஒன்றுமில்லாதவனாக தனிமைப்படுத்தப்படும் அ(ட)ப்பாவிகளுக்கு நினைவுறுத்தலாக//

நெஞ்சைத் தொட்ட வரிகள்...வாழ்த்துக்கள்..மேலும் எழுதவும்...

ஆவலுடன்,
புலிப்பாண்டி

August 11, 2005 1:58 AM  
Blogger பாபு said...

This post has been removed by a blog administrator.

August 11, 2005 4:05 AM  
Blogger பாபு said...

அட, பரவாயில்லையே,

மூன்றாம் பதிவிலேயே புலிப்பாண்டிகளையும் நேர்மறையாக பதில் எழுத வைத்துவிட்டீர்களே.

முஸ்லிம் பெயரில் எழுதுகிற உங்களை பாராட்டுவதற்கு அவருக்கு ஏதேனும் 'பெட்ரோ டாலர்'
கை மாறியுள்ளதா என்று 'கனம் கோர்ட்டார்' அறிய விரும்புகிறார்கள்.



நல்லடியார் said...

//தமிழ்மணத்தில் முஸ்லிம் வலைஞர்கள் 'இஸ்லாம்'பற்றி மட்டுமே எழுதுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை நீங்கள் தகர்ப்பீர்கள் என்ற நம்பிக்கை வந்துள்ளது.//

நல்லடியார்,
நீங்கள் 'குற்றச்சாட்டாக' குறிப்பிடுவதை தகர்க்கவும் தேவையில்லை. தகர்க்க வேண்டும் என்று நம்பவும் தேவையில்லை.

அப்படி குற்றம் சுமத்துபவர்கள் தான் என்ன, அப்படி, விஞ்ஞான, பொருளாதார ஆய்வு கட்டுரைகளையும் இலக்கியக் காவியங்களையுமா தந்துக் கொண்டிருக்கிறார்கள்?

'இந்த முஸ்லிம்கள் தமது மதத்தைப் பற்றி எழுத முடிகிற அளவுக்கு நம்மால் நமது மதத்தை பற்றி எழுத முடியவில்லையே' என்கிற ஆதங்கத்தில் தான் அப்படி சொல்கிறார்களே தவிர அதை பெரிதாக எடுத்துக் கொள்ளும் அளவுக்கு ஒன்றுமில்லை.

(அது போகட்டும், உங்களின் பதிவுகளும் யாரோ ஒரு சிலருக்கு பதில் சொல்வதாக அமையாமல் பொதுவாக இஸ்லாம் பற்றி அறியத்தாருங்களேன்).

August 11, 2005 4:06 AM  
Blogger நல்லடியார் said...

//அப்படி குற்றம் சுமத்துபவர்கள் தான் என்ன, அப்படி, விஞ்ஞான, பொருளாதார ஆய்வு கட்டுரைகளையும் இலக்கியக் காவியங்களையுமா தந்துக் கொண்டிருக்கிறார்கள்//

கொஞ்சம் அசந்தா, நல்லடியாரிடமிருந்து வந்த கடிதம் என்று கூட பதிவு போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை:-)

//'இந்த முஸ்லிம்கள் தமது மதத்தைப் பற்றி எழுத முடிகிற அளவுக்கு நம்மால் நமது மதத்தை பற்றி எழுத முடியவில்லையே' என்கிற ஆதங்கத்தில் தான் அப்படி சொல்கிறார்களே தவிர அதை பெரிதாக எடுத்துக் கொள்ளும் அளவுக்கு ஒன்றுமில்லை.//

இருக்கலாம். ஒவ்வொரு மதத்திலும் நல்லதும் இருக்கு, கெட்டதும் இருக்கு. எது சரியோ அதை எடுத்துக் கொள்ள வேண்டும் என நழுவுதும் உண்டு. நல்லது/கெட்டது தீர்மணிப்பது யார் என்பதே பிரச்சினை!!!

//(அது போகட்டும், உங்களின் பதிவுகளும் யாரோ ஒரு சிலருக்கு பதில் சொல்வதாக அமையாமல் பொதுவாக இஸ்லாம் பற்றி அறியத்தாருங்களேன்). //

குற்றச்சாட்டை மறுக்கும் போது சில சமயம் தனிப்பட்ட நபரின் பெயர்களை குறிப்பிட வேண்டியுள்ளது. எனினும் அதிக பட்சம் கண்ணியத்தை கடைபிடித்தே எழுதுகிறேன். இனி என் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள முயற்சிக்கிறேன். இன்ஷா அல்லாஹ்!

August 11, 2005 1:31 PM  
Blogger நல்லடியார் said...

//மூன்றாம் பதிவிலேயே புலிப்பாண்டிகளையும் நேர்மறையாக பதில் எழுத வைத்துவிட்டீர்களே.

முஸ்லிம் பெயரில் எழுதுகிற உங்களை பாராட்டுவதற்கு அவருக்கு ஏதேனும் 'பெட்ரோ டாலர்'
கை மாறியுள்ளதா என்று 'கனம் கோர்ட்டார்' அறிய விரும்புகிறார்கள்.//

ஆரோக்கியம் அப்படியெல்லாம் சொல்ல மாட்டார் என நம்புவோமாக! பார்ப்போமே புலிப்பாண்டியின் திறந்த மனதை!

பி.கு: என் பதிவில் மனம் விட்டு பேசி விட்டு, கடைசியில் என்னை தீவிரவாதி என்று சொல்லி விட்டார்! ஆசாத் எதற்கும் கொஞ்சம் உஷாரா இருங்க!!

August 11, 2005 1:36 PM  
Blogger Abuaadhil said...

புலிப்பாண்டி அவர்களே!

உங்களின் பாராட்டுக்கு நன்றி.

August 11, 2005 2:05 PM  
Blogger அபூ முஹை said...

அபூ ஆதில், நல்ல பதிவு!

செல்வங்களை சேகரித்து விடுவது மட்டுமே வாழ்க்கையில் அனைத்திலும் சிறந்ததாக - பிரதானமாகக் கருதி குடும்பத்தை இரண்டாம் பட்சமாக ஆக்கிவிடுகிறார்கள்.

கிரேக்க நாட்டைச் சார்ந்த அரிஸ்டாட்டில் ஒனாஸின் ஒரே மகள் - கிறிஸ்டினா ஒனாஸிஸ் - அரிஸ்டாட்டில் மறைவுக்குப்பின் அவருடைய அனைத்துச் செல்வங்களுக்கும் அதிகாரப்பூர்வமான ஒரே வாரிசு.

கிறிஸ்டினா ஒனாஸிஸ் ன், செல்வங்ககளைப் படிக்கும் எம்மக்களும் இவ்வளவு செல்வங்களுக்கு சொந்தக்காரி மிகவும் அதிர்ஷ்டசாலி என எண்ணுவதோடு, மகிழ்ச்சியான வாழ்வைப் பெற்றுக்கொண்டார் என்றே முடிவும் செய்திருப்பார்கள்.

கிறிஸ்டினாவின் முடிவு - அர்ஜெண்டினாவில் உள்ள ஒரு ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்டாள் என்பது செல்வங்களைப் பெற்றிருந்தும் மகிழ்ச்சிக்கானத் தக்க வழிமுறைகளைத் தேர்ந்தெடுக்க தெரியாமல் போனதற்கு கிறிஸ்டினா ஒரு மோசமான முன்னுதாரணமே!

அன்புடன்,
அபூ மஹை

August 12, 2005 2:04 AM  
Blogger அரசு said...

உள்ளத்தை உலுக்கிய பதிவு.
உங்கள் எழுத்துக்கள் மூலம் மற்றவர்களின் உள்ளங்களை திறக்கவும் முடியும் என எதிர் பார்க்கின்றேன்.தொடருங்கள், வாழ்த்துகிரேன்.

August 22, 2005 5:16 AM  
Blogger கவிமதி said...

This post has been removed by a blog administrator.

November 17, 2005 11:47 AM  

Post a Comment

<< Home