நூல்களால் அறிவை நூற்போம்!
(நேற்று இட்ட பதிவு ஏனோ தென்படவில்லை. அதனால் மீண்டும் இடுகிறேன் --- நட்புடன், அபூஆதில்.)
நூலகம் என்பது அறிவின் நுழைவாயில் என்று சொன்னால் அது மிகையாகாது. கல்வி எப்படி வாழ்க்கைக்கு வழிகாட்டியோ, அதுபோல் கல்விக்கு நூலகம் ஒரு மிக முக்கிய வழிகாட்டி மையம். நூலகமும், கல்வியும் என்பது தாயும், சேயும் போல. ஒன்றிலிருந்து மற்றொன்று பரிணாமம் எடுக்கிறது.
அறிவை வளர்த்துக் கொள்ள முயலும் ஒவ்வொருவருக்கும் நூலகம் ஒரு வரமாகவே இருந்து வருகிறது. பண்டையக் காலத்திலிருந்தே பல அறிஞர்கள் பல்வேறு நூல்களை ஒன்றுதிரட்டி தனக்கென ஒரு நூலகம் அமைத்து அதிலிருந்து அறிவின் சுவையைப் பருகி வந்திருக்கிறார்கள். பள்ளிக்கூடங்களிலிருந்து, பல்கலைக்கழகம் வரை நூலகம் அமைத்து அறிவின் தேடலுக்கு வழி அமைத்திருக்கிறார்கள். அதுஅட்டுமல்லாமல், இன்று அரசாங்கமே பட்டிதொட்டியிலிருந்து, மெட்ரொபாலிடன் நகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் பொது நூலகம் அமைத்து செயல்பட்டு வருகிறது. அறிவைத் தேடுவதற்கு மட்டும் வயது வரம்பு என்பதே இல்லை.
அறிவின் தேடலை வலியுறுத்தும் விதமாக அனேக மேதைகள், சமூக சிந்தனையாளர்கள் கருத்து சொல்லியிருக்கிறார்கள். இஸ்லாம் கல்வியின் முக்கியத்துவத்தை மிக அதிகமாக வலியுறுத்தி வருகிறது. அல்லாஹ் தனது அருள்மறையாம் அல்-குர் ஆனில் பின்வருமாறு கூறுகிறான்:
"கற்றோரும், கல்லாதோரும் சமமாவார்களா? நிச்சயமாக நல்லுபதேசம் பெறுவோர் அறிவுடையோரே"
அத்தியாயம் 39; வசனம் 09
மேற்கண்ட குர் ஆன் வசனம் மூலம் கல்வியின் முக்கியத்துவத்தை இஸ்லாம் எந்த அளவுக்கு வலியுறுத்துகிறது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
ஒரு மனிதன் இவ்வுலகில் சிறப்புற்று வாழ்வதற்கும், முறையான பாதையைத் தேர்ந்தெடுத்து தனது வாழ்வை அமைத்துக் கொள்வதற்கும் கல்வியே மிக முக்கிய காரணமாக அமைகிறது. இதனை வலியுறுத்தும் விதமாக இறுதித் தூதர் முஹம்மத்(ஸல்...) அவர்கள், "அல்லாஹ் ஒருவனுக்கு நன்மையை நாடிவிட்டால் அவனுக்கு கல்வியறிவை வழங்கி விடுகிறான்" என்று கூறுகிறார்கள்.
இவ்வுலகில் எதை வேண்டுமானாலும் இழக்கத் தயாராகலாம். ஆனால், கல்வி அப்படியல்ல. பணம் தன்னைத் தேடி வரும்போது அதனை வெறுத்து வாழும் மனிதர்களை நாம் இவ்வுலகில் காண்கிறோம். பதவி தம்மை நாடி வரும்போது அதனை மறுத்து வாழும் மனிதர்களையும் நாம் காண்கிறோம். ஆனால், கல்வியைக் கற்றுக் கொள்ளும் விஷயத்தில் மனிதன் இயல்பாகவே ஒருவித தேட்டமுடையவனாகவே இருக்கிறான். எனவேதான், தான் பெறாத கல்வியை தன் சந்ததியாவது பெற வேண்டும் என்று பாமர மக்கள் கூட அதற்காக எதையும் இழக்கத் தயாராகிறார்கள்.
இஸ்லாம் எந்நிலையிலும் அறிவின் தேடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கிறது. இறுதித் தூதர் முஹம்மது (ஸல்....) அவர்களது காலத்தில் நடைபெற்ற ஒரு போரின்போது முஸ்லிம்களால் போர்க்கைதிகளாக பிடிக்கப்பட்ட எதிரிகளை விடுவிக்க, முஸ்லிம்களில் எழுத்தறிவில்லாதவர்களுக்கு அவர்கள் எழுதப் படிக்க கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதையே நிபந்தனையாக விதித்து எழுத்தறிவு இயக்கத்தை அன்றே ஆரம்பித்து வைத்த நபியவர்களின் ஒப்பற்ற நடைமுறை வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
எழுதப்படிக்கக் கற்றுக் கொள்வதோடு மட்டும் நமது கடமை முடிந்து விடுவதில்லை. கற்ற அறிவை முறையான வழிகளில் பயன்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும். ஒருவன் ஒரு சட்டையை வாங்கி அழகாக ஹாங்கரில் மாட்டி வைத்துக்கொண்டு என்னிடம் மிக அழகான சட்டை ஒன்று இருக்கிறது என்று கூறிக்கொண்டே வெற்று உடம்போடு திரிந்து கொண்டிருந்தானென்றால் அவனை நாம் அறிவுடையவனாக ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதுபோலவே, எழுதப்படிக்கத் தெரிந்த ஒருவன் அதைக் கொண்டு அறிவைத் தேடிப் பெற முயலாமல் இருந்தானேயானால் அவன் பெற்ற எழுத்தறிவால் அவனுக்கு எந்த பயனும் இருக்கப் போவதில்லை.
மிகச்சமீப காலம் வரை மக்களிடையே புத்தகம் படிக்கும் வழக்கம் அதிகமாக இருந்தது. இன்றோ நிலைமை தலைகீழ். ஆறிலிருந்து நூறு வரை தொலைக்காட்சி முன்பு அமர்ந்து கற்பனைக் கதாபாத்திரங்களுக்காக கண்ணீர் விட்டுக்கொண்டு வீட்டையே திரையரங்குகளாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். புத்தகம் படிக்கும் வழக்கமோ இரயில் பயணங்களோடு நின்று போய்விட்டது. அதனால்தானோ என்னவோ மக்களின் சிந்தனையும் விரிவடையாமல் தண்டவாளம் போலவே சென்று கொண்டிருக்கிறது. இந்நிலை மாற வேண்டும். நூல்களோடு நம் தொடர்பை வலுப்படுத்த வேண்டும். அடைபட்டிருக்கும் அறிவுக்கதவைத் திறக்க வேண்டும்.
அறிவு என்பது ஆடை போல. அதை அணிந்தால்தான் மனிதனுக்கு கண்ணியம் கிடைக்கும்.
நாம் அறிவெனும் ஆடையை நூல்களால் நூற்போம்.

